வாழ்க்கையில் வாகனங்கள்

Thursday, November 27, 2008



வாகன நெரிசலுக்குள்
தொலைந்துபோய்விடுகிறது- வாழ்க்கை
பயன் தரும் வேலைகளைவிட – அதற்குப்
பயணப்படும் நேரங்களே – நாளில்
அதிகமிருப்பதாய்ப்படுகிறது.

வீதிகள் அகலமாகமுடியாத
நகரங்களிலெல்லாம்
நாளுக்குநாள் - புதிதாய்
வந்து குவிகின்றன
வாகனங்கள்.....


விதிகள் பற்றிக் கவலையில்லை
கிடைக்கும் இடைவெளிக்குள்
வாகனம் செலுத்திட
திறமையிருந்தால் போதுமென்றாகிவிட்டது


போட்டி போட்டுக்கொண்டும் - சிலர்
உள்ளே போட்டுக்கொண்டும்
வாகனம் ஓட்டுகிறார்கள்
வீடுதிரும்பும்வரை – விதி
நம்மீது ஒரு விழி
வைத்திருக்கிறது

முகத்தினில் இறுக்கம்
உடைகளில் சுருக்கம்
தாமதத்தினால்
மனத்திலும் கொஞ்சம்
வருத்தம் கொண்டு
வாகனம் விட்டிறங்கையில்
புகைக்கி விட்டுப் போகிறது
இன்னொரு வாகனம்


ஒவ்வொருமுறையும்
கண்ணயர்கையில்
திடுக்கிட்டு எழவைக்கிறது
இரைந்து செல்லும் வாகனங்கள்
இரவினைக் குலைக்கிறது.

இத்தனை இருந்தும்
விரும்பி ஏற்றிடவோ
விலக்கிவிடவோ முடியாததாய்
பின்னிப் பிணைந்திருக்கிறது
வாழ்க்கையில் வாகனங்கள்.




.

Read more...

திருகோணமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்,இலங்கை..

Thursday, November 20, 2008


ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேரூந்து தரிப்பிடத்துக்கு மிக அருகாமையிலும் திருகோணமலை புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.



வரலாறு :- 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

திருவிழா :-




பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.


விமர்சையாக நடைபெறும் விழாக்கள்



# வைகாசிப் பொங்கல்


# நவராத்திரி


# கும்பவிழா


# இலட்சார்ச்சனை


# கேதாரகௌரி விரதம்





கேதாரகௌரி விரதம்



இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்.

புரட்டாதிமாதம் விஜயதசமி முதல் ஐப்பசிமாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.

இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவுசெய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.





வழமைபோலவே இம்முறையும் கேதாரகௌரி விரத அனுஷ்டானங்கள் சிறப்புற நடைபெற்று இனிதே நிறைவுற்றது.


{நன்றி - புகைப்பட உதவி த.ஜெயகௌரி}

Read more...

மூத்த எழுத்தாளர் தம்பலகாமம் க.வேலாயுதம் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு...

Saturday, November 15, 2008

தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞான விநாயகர் ஆலயத்தில் பொங்கல்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் திரு.கே.சந்திரகுலசிங்கம் விழாவுக்குத் தலைமை வகித்தார். இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் திரு.க.ஜெயசீலன் அவர்களின் நிதியுதவியில் கோயில் மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதை முன்னிட்டு இப்பொங்கல் விழா நிகழ்வுகள் இடம் பெற்றன.

வீரகேசரி பத்திரிகையில் தம்பலகாமம் நிருபராகக் கடமையாற்றியவரும், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளருமாகிய தம்பலகாமம் க.வேலாயுதம் இவ்விழாவில்வைத்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 91 அகவையைத் தாண்டும் அவரின் தமிழ்த் தொண்டு அளப்பெரியது.

தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.










1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.


அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.

தம்பலகாமத்தைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய ‘இரங்க நாயகியின் காதலன்’ என்னும் சரித்திர நாவலும், 'தமிழ்கேட்க ஆசை' என்ற கட்டுரைத் தொகுப்பம், அவர்வாழ்க்கை வரலாற்றை விரித்துரைக்கும் 'தம்பலகாமம் க.வேலாயுதம்' என்ற நூலும் இதுவரை வெளிவந்துள்ளன. அவர் எழுதிய 'இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்' என்ற ஆய்வு நூல் மிகவிரைவில் வெளியிடப்படவுள்ளது.



புலம் பெயர்ந்து வாழும் திரு.க.ஜெயசீலன் அவர்களின் அன்பளிப்பில் கவிஞருக்கு பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Read more...

தமிழ்மண நட்சத்திர வாரம் - ஒரு மீள்பார்வை

Sunday, November 02, 2008


கடந்த வாரம் ஜீவநதி வலைப்பூவினை தனது இந்தவார நட்சத்திரமாக ஏற்றுச் சிறப்பித்த தமிழ்மணத்திற்கும், தமிழ்மண நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆரம்பித்து 80 நாட்களை இன்றுடன் பூர்த்தி செய்யும் ஒரு வலைப்பூவிற்கு இப்படியொரு அறிமுகம் கிடைத்திருப்பது மனமகிழ்வைத் தருகிறது. வலையேற்றிவைத்த எண்ணங்களை சகபதிவர்களுடனும் வலைப்பூ வருகையாளர்களிடமும் பகிர்ந்துகொள்வதில் தன் சிறப்பான பங்கினை வகித்திருக்கிறது இந்த தமிழ்மண நட்சத்திரவாரம்.
.
வருகைகள்
திகதி

.
மேலே காட்டப்பட்டிருப்பது ஜீவநதி வலைப்பூக்கான வருகைகள் பற்றிய கணிப்பீடு. {தமிழ்மண நட்சத்திர வாரம் 27இருந்து 2 வரை}

{நன்றி Histats.com }
நீலநிற வரைபு - Page views
மஞ்சள்நிற வரைபு - Visitors
கபிலநிற வரைபு - new visitors

.
இந்த நட்சத்திரவாரத்தில் சகபதிவர்களும், வலைப்பூ வருகையாளர்களும் எனது பதிவுகளுக்குத் தந்த வரவேற்பும், மறுமொழிகளும் சந்தோசத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் தந்தது.
எனவே தொடர்ந்து வரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடு ஜீவநதி உங்கள் வலைநாடி வரும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். வணக்கம்....

Read more...

மீண்டும் சந்திப்போம்

யாழ் மருத்துவ பீட 'MEDICOS' NITE ' இதழுக்காக மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது மாற்றம் ஏதுமில்லாமல் பகிர்தலுக்காக.................

வெள்ளைக் கட்டடத்திற்கு
விடைகொடுக்கும் நாளின்று
விழாமுடியும்வரை
விளங்கப்போவதில்லை
பிரிதலின் பெறுமதி


நாளையவிடியலில்
நாற்திசையாய் நண்பர்கள்பிரிய
மெல்லமாய் வெறுமை
கள்ளமாய் உள்னுழையும்
ஆறுவருட பந்தமென்பதொன்றும்
அற்பமானதல்லவே


நினைக்கையில்
நேற்றுப்போல் இருக்கும்
வாசற்படி தொழுது
வரவேற்கப்பட்ட முதல்நாள்
காலச்சக்கரம் கனகதியில்
சூழல்கிறது


விடைபெற்றபின்னும்
மீளவும் வரலாம்
விரிவுரையாளனாக
விருந்தினராக மற்றும் பலவாக
முடியாததொன்றுதான்
மறுபடியும் மாணவனாக


உறவுகளில் விசித்திரம்
“நட்பு”
உருவாதல்மிகஎளிது
அதுபோலவே உடைதலும்


நினைவு தெரிந்தநாளிலிருந்து
நீடுகொண்டேயிருக்கும்
நண்பர்கள் பட்டியலில்
நல்லதோர் இடம் நிட்சயம்
இங்கும் இருக்கும்


பிரிவுஎன்பதொன்றும்
வேரோடுறவைப்
பிடுங்கிச் செல்வதல்லவே
உணர்வுகளைப் பங்கு
பிரித்துச்செல்வது


உள்ளகப் பயிற்சி தொடங்கி
உறவுகள் புதிதாய் மலர்ந்து
உலகத்து நடைமுறைவாழ்வில்
நமைத்தொலைத்து
உருமாறிப் போய்விடும் - ஓர்
நாளில் வரும்
நண்பனின் சந்திப்பு
ஞாபகங்களைத் தாலாட்டும்
நடப்பு வயதினைக் குறைத்து
நம்மைச் சிலிர்ப்பூட்டும்
நம்பிக்கை தரும்
வாழ்வின் வடுக்களை
மறைக்கும்


ஆதலால்
நல்லனவற்றோடு பிரிவோம்
அல்லாதனவற்றை மறப்போம்
மறுபடியும் மீண்டும் சந்திப்போம்

Read more...
Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP