ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009

Thursday, April 09, 2009



அமைவிடம் :- திருகோணமலை நகரின் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.

வரலாறு :- இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராஜேந்திர சோழனுடைய காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்வாலயம் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழிபாட்டுக்குரிய தலமாக இருந்துவந்துள்ளதென்பதைத் துணிந்து கூறலாம்.



திருவிழாக்கள்

வைகாசிப் பொங்கல்

வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக்காணலாம்.

நவராத்திரி விழா

இலட்சார்ச்சனை :- இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திதிக்கு வருடாவருடம் சங்காபிஷேகம் செய்வார்கள். சங்காபிஷேகத்திற்கு முன்னுள்ள பத்து நாட்களும் இலட்சார்ச்சனை நடைபெற்று மறுநாள் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.



கேதாரகௌரி விரதம்


இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்.புரட்டாதிமாதம் விஜயதசமி முதல் ஐப்பசிமாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவுசெய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.


கும்பவிழா : விஜயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும். இவ்விழாபற்றிய தகவல்கள் வரும் நாட்களில் பதிவேற்றப்படும்.



{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }












வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது. தரிசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.



4 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:

-/பெயரிலி. Jan 29, 2009 9:22:00 AM  

நன்றி

தங்கராசா ஜீவராஜ் Jan 29, 2009 3:01:00 PM  

நன்றி -/பெயரிலி.

ss Jan 29, 2009 6:29:00 PM  

thanks

தங்கராசா ஜீவராஜ் Jan 29, 2009 7:32:00 PM  

thanks ss

Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP