இறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......
Thursday, May 14, 2009
பாடல் ஒன்று எழுதச் சொல்லி
காற்றுக் கேட்குது ஆனால்
பாழும் மனது வார்த்தை வரும்
வழியைப் பூட்டுது
வயல் வெளியில் தென்றலோடு
சேர்ந்து நடக்கையில் தடை
வரம்பு மீறிப் பாய்ந்துவருது
கவிதை அருவியே
அடிக்கும் தொலைபேசிதனை
எடுக்கப் போகையில் மனதில்
இடிஇடித்து கொள்கிறதே
எதிர் முனையில் யார்?
தெருவில் நின்ற மனிதனவன்
உற்றுப் பார்த்ததால் அந்த
இரவு முழுதும் பகலாய்ப்போச்சே
என்ன கொடுமை சார்
செய்தி சொல்லும் TV தனை
உரத்துக் கேட்கையில் சில
சொற்கள் வந்தால் பதறியடித்து
குறைக்க வேண்டும் நாம்
மனம் விட்டு சிரிச்சுப்
பல வருசமாகுது சொந்த
சனம் மறந்து போனவர்கள்
தொகையும் கூடுது
இறப்பின் பயம் தெரியுதிங்கே
எல்லோர் முகத்திலும் இன்னும்
எத்தனைகாலம் இப்படி நாமும்
வாழப் போகிறோம்


12 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:
வாழும் போது செத்துச் செத்துச் பிழைப்பவன் மனிதனா ! என்ற வைரமுத்துவின வரிகள் தான் ஞாபகம் வருகின்றது !
உங்கள் படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன !
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !
நன்றி ஓவியன்
“இறப்பின் பயம் தெரியுதிங்கே
எல்லோர் முகத்திலும் இன்னும்
எத்தனைகாலம் இப்படி நாமும்
வாழப் போகிறோம்”
இன்றைய காலத்தில் எம்மவர் நிலைமை இதுவாகி விட்டது. இன்றோ?
நாளையோ ?என்றோ ? விடிவு வரும் என்று நம்பியிருக்கும் அந்த மக்களைப் போல விரைவில் ஓர் புதிய உதயம் வரும் என்று நம்புவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
//அடிக்கும் தொலைபேசிதனை
எடுக்கப் போகையில் மனதில்
இடிஇடித்து கொள்கிறதே
எதிர் முனையில் யார்?
தெருவில் நின்ற மனிதனவன்
உற்றுப் பார்த்ததால் அந்த
இரவு முழுதும் பகலாய்ப்போச்சே
என்ன கொடுமை சார்
செய்தி சொல்லும் TV தனை
உரத்துக் கேட்கையில் சில
சொற்கள் வந்தால் பதறியடித்து
குறைக்க வேண்டும் நாம்//
உங்கள் உள்ளம் படும் பாடு இந்தவரிகளில் தெரிகிறது.
நன்றி Renuka Srinivasan
நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே
//மனம் விட்டு சிரிச்சுப்
பல வருசமாகுது சொந்த
சனம் மறந்து போனவர்கள்
தொகையும் கூடுது//
எல்லாருக்கும் பொதுவான துயர். சொந்தங்களைப் பிரிந்து சொந்த ஊர்களைப்பிரிந்து ஆண்டுகளைக் காலம் கொண்டு போன பின்னும் அவலம் தொடர்கிறது.
சாந்தி
நன்றி சாந்தி அவர்களே
மனம் கனக்கிறது .... நெஞ்சு வெடிக்கிறது .....
உங்கள் உணர்விர்க்கு நன்றி நண்பரே
ம்ம்ம்ம்...வலிக்கிறது.
நன்றி அன்புடன் அருணா அவர்களே
Post a Comment